மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு குடிநீரின் நன்மைகள்…!

காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது.
நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளரும், நிலவேம்பு குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவருமான டாக்டர் சுபாஷ்சந்திரன் கூறியதாவது:-

நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதை கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள். இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.

நிலவேம்பு
நிலவேம்பு

தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும்.

டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. நிலவேம்புடன் மேலும் 8 பொருட்களும் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது.

நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.

இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் என்பது 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள். இந்த கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது.

சித்த மருத்துவத்தால் எந்த வித பக்க விளைவோ, பாதிப்போ ஒரு காலமும் ஏற்படாது. தற்போது பெரும்பாலானவர்கள் சித்த மருத்துவத்தை நாடி வருகிறார்கள்.

நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே மக்கள் யாரும் பயப்படாமல் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்

Written by admin